ஒழுக்கத்தின் நடனம்
கேரளாவின் குருவாயூர் என்ற புனித தலத்தில், கோவில் மணிகள் ஒலித்து, செண்டை மேளத்தின் ஓசை காற்றை நிரப்பியிருந்தது, ஸ்ரீதேவி என்ற இளம் பரதநாட்டிய நடன மாது அங்கு வாழ்ந்து வந்தாள். சிறுவயது முதலே குரு சத்யதேவ் என்பவரிடம் அவள் பயிற்சி பெற்று வந்தாள். சத்யதேவ் கண்டிப்பானவர், ஆனால் ஞானமுள்ள நடன ஆசிரியர், சாதாரண மாணவர்களை அசாதாரண கலைஞர்களாக வடிவமைப்பதில் பெயர் பெற்றவர்.
ஒரு நாள், அவள் கேரள மாநில அளவில் ஒரு நடன விழாவில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டாள், பல மாவட்டங்களிலிருந்து அங்கு வந்திருந்த நடனக் கலைஞர்களுடன் போட்டியிடுவது எளிது என்ற நம்பிக்கையுடன், அவள் தனது நடன அசைவுகளை மேம்படுத்துவதை விட்டு தனது பழைய நடனங்களின் காணொளிகளை ரசிப்பதில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தாள் .
விழா துவங்கியது அவள் பிரம்மாண்டமான மேடையில் ஏறியபோது, முதல் சில நிமிடங்கள் குறைவில்லாமல் ஓடின, திடீரென தாளம் தவறத் துவங்கியது. பின்னர் இன்னொன்று என்று பாதத்தின் தாளம் தப்புத் தாளமாக மாறியது, பார்வையாளர்கள் கவனித்தனர். அவள் ஒரு வேதனை கலந்த புன்னகையுடன் தனது நடனத்தை முடித்தபோது அவளுடைய மனது நொறுங்கி இருந்தது. அந்நிகழ்ச்சியில் அவள் வெற்றி பெறவில்லை.
மனமுடைந்த ஸ்ரீதேவி கோவிலின் படிக்கட்டுகளில் தனியாக அமர்ந்து, மாலைக் காற்றில் அசைந்தாடும் விளக்குகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். குரு சத்யதேவ் அவளுக்கு அருகில் அமர்ந்தார், சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "நீ ஏன் தடுமாறினாய் என்று தெரியுமா?" என்றார்.
ஸ்ரீதேவி முனகலுடன் சொன்னாள்: "நான் தயாராக இல்லை."
குரு தலையசைத்தார். "நீ ஒரு வெற்றி பெற்றவளைப் போல நடனமாடினாய், ஒரு மாணவியைப்போல் அல்ல. அதுதான் பெருமைக்கும் திறமைக்கும் உள்ள வித்தியாசம்."
தான் இனிமேல் மாறுவதாக உறுதியளித்த ஸ்ரீதேவி மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டாள். ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திற்கு முன், அவள் தனது கால் அசைவுகள், முகபாவனைகள், உடல் தோரணைகள் ஆகியவற்றை மேம்படுத்தினாள்—அவள் இதற்கு முன்பு வென்றதே இல்லை என்பது போல. நாள் முழுவதும் ஆடியதால் ஓடிய வியர்வையும் நடன ஒழுக்கமும் அவளை ஒரு புதிய மாணவியாக மாற்றியது.
ஒரு வருடம் கழித்து, அவள் மீண்டும் அதே விழா மேடையில் நின்றாள். ஆனால் இந்த முறை, அவள் தோற்க வரவில்லை என்பது போல் நடனமாடினாள். ஒவ்வொரு அசைவும் நம்பிக்கையை வெளிப்படுத்தியது, ஒவ்வொரு முகபாவனையும் கவனத்தை ஈர்த்தது.
நிகழ்ச்சியின் இறுதியில் ஆட்டம் அப்படியே நின்றதும், பார்வையாளர்கள் கடலென கரவொலி எழுப்பினர். ஸ்ரீதேவி வெறுமனே நடனமாடவில்லை—அவள் வென்று சாதித்தாள்.