கடமை எனும் கைத்தடி
அமைதியான சியாங் மாய் மலைகளில், ப்ரீச்சா என்ற கோபம் கொண்ட தாய்லாந்து துறவி ஒருவர் இருந்தார். கர்ம வினையின் கோட்பாடு குறித்த அவரது கண்டிப்பான போதனைகளுக்குப் பெயர் பெற்றவர். பேராசை கொண்டவர்கள் என்று கிராம மக்களை அவர் அடிக்கடி கடிந்து கொண்டார், மேலும் அவர்களின் செயல்களுக்கு கடுமையான எச்சரிப்பை விடுத்தபடி இருந்தார் . மதியம் மிகவும் காரசார வகுப்பு நிகழ்த்திய பிறகு, அவர் தனது எளிய குடிசைக்கு திரும்பினார், அங்கு ஒரு சிறுமி அவருக்காக காத்திருப்பதைக் கண்டார்.
அவள் பெயர் மாலி, சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாயியின் மகள். துன்பம் என்பது கடந்த கால செயல்களின் விளைவு என்று ப்ரீச்சா கூறியதை அவள் கேட்டிருந்தாள், இப்போது அவள் அவரிடம் நேரடியாகக் கேட்டாள், "என் தந்தை தனது தீவினைகளால் துன்பப்பட்டால், என் வலியும் அவரது வினையின் ஒரு பகுதியா?"
ப்ரீச்சா அமைதியாக இருந்தார்.
அந்த மாலை, சிறுமியின் கேள்வி அவரைத் தொந்தரவு செய்ததால், கோவிலுக்குப் பின்னால் இருந்த மூங்கில் காட்டுக்குள் தனியாக நடக்கலானார். அங்கு அவர் ஒரு மூத்த துறவியான லுவாங் போவைச் சந்தித்தார், அவர் ஒரு நீரோடை அருகே அமைதியாக அமர்ந்திருந்தார்.
"நான் கர்மாவைப் பற்றி பேசினேன்," என்று ப்ரீச்சா ஒப்புக்கொண்டார்.
"ஆனால் அந்த சிறுமியின் துக்கம் - அவள் ஏன் அதை சுமக்க வேண்டும்?"
லுவாங் போ நேரடியாக பதிலளிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் அருகில் கிடந்த ஒரு மூங்கில் குச்சியை எடுத்து ப்ரீச்சாவிடம் கொடுத்தார். "நீங்கள் ஒரு குச்சியின் ஒரு முனையை எடுத்தால், மற்றொன்றையும் எடுக்கிறீர்கள்," என்று அவர் அமைதியாக கூறினார்.
ப்ரீச்சா குச்சியை வெறித்துப் பார்த்தார். வயதான துறவி புன்னகைத்தார். "காரணம் மற்றும் விளைவு பற்றி நாம் பேசும்போது, அவை ஒன்றே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது செயல்கள், நமது வார்த்தைகள் - அவற்றின் விளைவுகளிலிருந்து பிரிக்கப்படவில்லை. நீங்கள் கர்மாவைப் பற்றி போதித்தால், அதனுடன் வரும் சுமைகளை எளிதாக்கும் கடமையும் உங்களுக்கு உண்டு."
அந்த நாள் முதல், ப்ரீச்சாவின் போதனைகள் மென்மையாயின. அவர் இன்னும் கர்மாவைப் பற்றி போதித்தார், ஆனால் இப்போது அவர் கிராமத்து பாதைகளிலுல் நடந்து சென்று, மக்களின் துயரங்களைக் கேட்டு, சரி செய்ய முடிந்ததை சரி செய்ய உதவினார். இப்போது, இறுதியாக, இரு முனைகளிலும் உள்ள எடையை புரிந்து கொண்டு அவர் கடமை எனும் கைத்தடியை கையில் எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.