உடல் இயக்கத்திலும் மனம் அமைதியிலும்
கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் சிற்றூர் என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த லட்சுமி தனது குடும்பத்திற்காக அயராது உழைக்கும் ஒரு இல்லத்தரசி. விடியல் முதல் அந்தி வரை சமையல், சுத்தம் செய்தல் மற்றும் வீட்டை நிர்வகித்தல் என அவள் ஓயாது வேலை செய்தாள். ஆனால் அன்றாட வாழ்க்கையின் குழப்பத்தில், அவளுடைய மனம் ஒருபோதும் அமைதியைக் கண்டதில்லை.
ஒரு நாள், மிக சோர்வாக உணர்ந்த அவள் அருகில் அமைதியான சோகநாசினி நதிக்கரையில் ஓரமாக நடக்க சென்றாள். அங்கு ஒரு ஆலமரத்தின் கீழ் யோக குருவான மகான் மணிஜி தியானம் செய்து கொண்டிருந்தார்.
ஆர்வம் மேலிட, அவள் அவரை அணுகி, "குருஜி, நான் நாள் முழுவதும் வேலை செய்கிறேன். என் உடல் எப்போதும் கர்மத்தின் இயக்கத்தில் இருந்தபோதும் மனம் மட்டும் அமைதியற்றதாக உணர்கிறேன். நான் எப்படி மனதின் சமநிலையை அடைவது?"
குரு மணிஜி புன்னகைத்து லட்சுமியிடம் ஒரு களிமண் பானையை கொடுத்து, அதில் நதியிலிருந்து நீர் நிரப்பி, மேலே அவர் அமர்ந்திருந்த ஆலமரம் வரை ஒரு துளி கூட சிந்தாமல் எடுத்து வரவேண்டுமென்று சொன்னார்.
அவள் ஆலமரத்தின் அருகே சென்றடைந்ததும், குரு மணிஜி கேட்டார், "கண்ணா! வழியில் நீ என்னம்மா கவனித்தாய்?"
அவள் ஒரு கணம் யோசித்த பிறகு சொன்னாள். "ஒன்றுமில்லை, குருஜி. நான் பானையில் இருந்த தண்ணீரில் மட்டுமே கவனம் செலுத்தினேன்."
குரு தலையசைத்தார். "அதுதான் முக்கியம். நமது உடல் கர்மத்தில் இயங்கிக் கொண்டிருக்கலாம், ஆனால் மனம் எல்லா நேரத்திலும் அமைதியாக இருக்க வேண்டும்."
அன்றுதான் லட்சுமி அந்த நிதர்சனமான வாழ்வின் மிக அரிய பாடத்தைக் கற்றுக்கொண்டாள்:
"உடல் இயக்கத்துடனும் மனம் அமைதியிலும் இருக்க வேண்டும்."